Friday, April 20, 2012

தம்புள்ள பள்ளிவாசல் படைத்துறைப் பாதுகாப்புடன் அடித்து நொருக்கப்பட்டது!

தம்புள்ளயில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஜும்மாபள்ளிவாசல் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிங்களக் காடையர்களால் இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கு சென்ற நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் தொழுகையில் இருந்த இஸ்லாமிய மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு பள்ளிவாசலை அடித்து நொருக்கியிருக்கின்றனர்.
பள்ளிவாசலை உடைப்பதற்கு முன்பாக கதிரை ஒன்று போடப்பட்டு அதில் பௌத்த பிக்கு ஒருவர் அமர்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருக்கின்றது.
தம்புள்ள புனித பிரதேசம் என்பதால் அங்கு வேறு இனத்தின் அடையாளங்கள் இருக்க முடியாது என்று தெரிவித்தே பள்ளிவாசல் மீதான தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. இதேவேளை பள்ளிவாசல் உடைப்பதற்கான முனைப்புக்கள் இடம்பெற்றுவருதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் அப்பகுதி மக்களால் முறையிடப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பு கண்டனம்:
சிறுபான்மை இன மக்கள் எவரும் இலங்கையில் வாழவே முடியாது இந்த நாடு பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தான நாடு என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்தச் சம்பவம் அமைந்திருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மனித நாகரிகம் உள்ள ஒரு இனம் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை ஒரு போதும் மேற்கொள்ளாது. இந்தச் சம்பவங்களுக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் துணை நின்றிருப்பது சிறுபான்மை இன மக்களை மிகுந்த ஆத்திரத்திற்கு உட்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகளை இனிவரும் காலங்களிலும் சிறுபான்மை இன மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களும் இணைந்து பேரினவாத அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுவதை இனிமேலும் தடுக்க முடியாது. பள்ளிவாசல் உடைப்புச் சம்பவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது என்றும் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்:
தம்புள்ளையில் இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலொன்று தகர்க்கப்பட்டுள்ளதாக கூறிய ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
அரசாங்க ஆதரவுடனான ஆயுத குழுவொன்றினால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் இப்பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதாக கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தினார்.
முஸ்லிம் விவகார திணைக்களத்தில் மேற்படி பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் எனவே அது சட்டவிரோதமானது என எவரும் கூற முடியாது எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அவர் தெரிவித்தார்.
இப்பள்ளிவாசல் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்டநடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கபீர் ஹாசிம் எம்.பி. கூறினார்.
இந்நாட்டு மக்கள் தமது சமய கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறினால், அவர்கள் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மாற்று வழியை நாட நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
Source: http://thaaitamil.com/?p=16394

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator