Sunday, April 8, 2012

கொந்தளிப்பான கடலில் மீன்பிடித்தல்: (தமிழாக்க கட்டுரை..)

(சிறிலங்கா அரசு வடக்கிலும் கிழக்கிலும் பாரிய கட்டுமானத் திட்டங்களையும் பொருண்மிய மேம்பாடுகளையும் மேற்கொள்வதாகப் பறை சாற்றுகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களது பொருளாதாரம் இரண்டு முக்கிய தொழில்களில் தங்கியுள்ளது. ஒன்று விவசாயம். மற்றது மீன்பிடி. இதில் வடக்கில் மீன்பிடித் தொழில்பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. சுமித் சாமின்டா (Sumith Chaaminda) என்ற சிங்கள ஆய்வாளர் எழுதிய இக்கட்டுரை த அய்லாந்து நாளேட்டில் ஏப்பிரில் 02 ஆம் நாள் வெளிவந்தது. வட மாகாணத்தில் நலிந்து போயிருக்கும் மீன்பிடித் தொழில்பற்றி முடிந்தளவு பக்கசார்பில்லாது எழுதியுள்ளார்.
(தமிழழாக்கம் - நக்கீரன்.)

யாழ்ப்பாணத்தில் மீன்பிடித் தொழில்:
யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தளவில் மீன்பிடித் தொழிலே பலரது வாழ்வாதாரங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. முப்பது ஆண்டுகாலப் போர் காரணமாக இந்தத் தொழில் மிகவும் நலிந்து போய்விட்டது. போருக்கு முன்னர் யாழ்ப்பாணமே மீன் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக இருந்தது. ஓர் ஆண்டில் 40,000 மீட்றிக் தொன் மீனை உற்பத்தி செய்தது. இது முழு உற்பத்தியில் நாலில் ஒன்றாகும். 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாண மாவட்டம் 20-25 விழுக்காடு மீன் உற்பத்தியைச் செய்தது. ஆனால் மூன்றாவது ஈழப்போர் முடிந்தபோது இது விழுக்காடு 3 - 5 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது. போர்க் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன் உற்பத்தி 2,000 மீட்றிக் தொன் ஆக இருந்தது. போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் உற்பத்தியில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் போருக்கு முந்திய கால அளவை எட்டவில்லை.
இன்றைய சிக்கல்களும் அறைகூவல்களும்:
வடக்கில் மீன்பிடித் தொழில்சம்பந்தமான சிக்கல்களுக்கு இராணுவ மயப்படுத்தல் ஒரு காரணமாகும். இந்த இராணுவமயப்படுத்தல் போரின் இறுதிக் கட்டத்தில் வலுப்படுத்தப்பட்டது. ஆனால் போர் முடிந்த பின்னரும் அது தளர்த்தப்படவில்லை. எடுத்துக்காட்டாக மீன்பிடிப்புக்குப் பெயர்போன சில கரையோரப் பகுதிகள் இப்போதும் உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் சிக்குண்டுள்ளன. அதனால் மீனவர்கள் அவ்விடங்களில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு ஒரு ஓரமாக மட்டும் போவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
அப்படிப் போவதற்கும் இராணவத்திடம் இருந்து அனுமதிச் சீட்டுப் பெறவேண்டும். சில கரையோரப் பகுதிகளில் இப்படியான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அல்லது தளர்த்தப்பட்டுள்ள போதும் வடமாகாண மீன்பிடி சமூகத்தினர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிகள் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் கட்டுப்பாடுகள் நீடிப்பதையிட்டு கவலை தெரிவிக்கிறார்கள். இந்தப் பகுதிகளில்தான் ஆண்டாண்டு காலமாக இந்த மீனவர்கள் தங்கள் தொழிலைச் செய்து வந்தவர்கள் ஆவர்.
வட மாகாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்புத் தளர்த்துப்பட்டுவிட்டதாக அரச அதிகாரிகள் சொன்னாலும் அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் மறுத்துரைக்கிறார். இது தொடர்பாகக் கடந்த ஆண்டு ஒக்தோபர் 21 இல் நாடாளுமன்றத்தில் திரு சுமந்திரன் ஒரு சுற்றுசார் அறிக்கையைச் (Situation Report) சமர்ப்பித்தார். இந்த அறிக்கை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் உட்படுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாண மீன்பிடித் தொழிலைப் பற்றி பின்வருமாறு விளக்குகிறது:
தமிழ் மீன்பிடி சமூகங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களது வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்ட்டுள்ளன. இந்தச் சபையில் கடந்த யூலை மாதம் நான் சமர்ப்பித்த அறிக்கையில் முல்லைத்தீவு மீன்பிடிச் சமூகத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றிய விபரங்களைக் கொடுத்திருந்தேன். குறிப்பாக கொக்குளாய் தொடங்கி கிளாக்கத்தையில் உள்ள சுண்டிக்குளம், மாதிரிக்கிராமம், உப்புமாவெளி, தூன்தை, அலம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணிப் பகுதிகளில் நிலவும் நிலமையை விளக்கியிருந்தேன். இந்தத் தடைகள் இப்போதும் நீடிக்கின்றன. அதைவிடப் பெரிய பாதிப்பு என்னவென்றால் பல தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இங்கு வந்து மீன் பிடிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நேரடியாக அனுமதி வழங்கியுள்ளது.
இராணவமயப்படுத்தல் ஒருபுறமிருக்க யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஆய்வாளர்கள் மற்றும் சிவில் அவையின் உறுப்பினர்கள் இந்தப் பிராந்தியத்தில் மீன்பிடி அபிவிருத்தியை மேம்படுத்துவது தொடர்பான வேறு பல சிக்கல்களை சுட்டிக் காட்டுகிறார்கள். அவற்றில் இந்திய (தமிழ்நாடு) மீனவர்கள் இந்தப் பகுதிகளில் அத்துமீறி மீன்பிடிப்பது ஒன்றாகும். இதனை "இந்திய இழுவைக் கப்பல் சிக்கல்" (Indian Trawler issue) என்கிறார்கள்.
ஏனைய சச்சரவுக்கான சிக்கல்களில் ஒன்று பருவ காலத்தில் வந்து மீன்பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்கள் பற்றியது. சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ள மீன்பிடி முறைகளை இந்திய மற்றும் தென்னிலங்கை மீனவர்கள் மேற்கொள்வது மீன்வளங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துதல், ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு அவசியமான அதிநவீன படகுகள் இல்லாமை, மீன்வளம் பற்றி இருப்பு எடுக்காமை, தீவுப்பகுதிகளில் நிலவும் போக்குவரத்துக் சிக்கல்கள், மீனவர்கள் அரசியல் செல்வாக்குப் படைத்த பெரிய மீன்முதலாளிகளில் தங்கியிருப்பது, உள்கட்டமைப்புகள் இல்லாமை, நிறுவனங்களிடம் இருந்து உதவியின்மை மற்றும் காப்புறுதி போன்ற வசதிகள் இல்லாமை ஆகும்.
மேம்பாட்டு நெடுஞ்சாலையில் குண்டுகுழிகள், தடுப்புமையங்கள் மற்றும் கால்நடைகள்:
அண்மையில் வடக்கு மாகாணத்தில் தொடக்கப்பட்ட மேம்பாட்டுத்திட்டங்கள் மேலே விபரிக்கப்பட்டுள்ள சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வு கண்ட போதும் அவை குறிப்பிட அளவில் நிலைமையை மாற்றியமைக்க முடியவில்லை. பிரதேச ஏற்றத்தாழ்வு, தங்கியிருக்கும் உறவுகள், அரசியல் வேறுபாடு, அரசியல் கட்டமைப்பு மற்றும் சமூக - பொருண்மிய சிக்கல்கள் இன்றுவரை நீடிக்கிறது. எதிர்மாறாக, பல சமயம், இந்த மேம்பாட்டு முயற்சிகள் இந்தச் சிக்கல்களை மேலும் சிக்கலாக உதவுகின்றன.
எடுத்துக்காட்டாக, தென்மாகாணத்தில் உள்ள வியாபாரிகள் அவர்களிடம் இருக்கும் குளிரூட்டிகள். அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை வலையமைப்புக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி "மேம்பாட்டு சாலை" வழியாக வடக்கு மீன்சந்தைக்கு வந்து வடக்குப் போட்டியாளர்கள் மீது தங்கள் மேலாண்மையைப் பலப்படுத்துகிறார்கள். ஆனால், இந்தப் புதிய வளர்ச்சி பற்றி வடக்கு மீனவ சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பது பற்றி இன்றுவரை பகிரங்கமாகப் பேசப்படுவதில்லை.
யாழ்ப்பாண சிவில் சமூக உறுப்பினர்கள் போருக்குப் பிந்திய அபிவிருத்தி காரணமாக ஏற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் இந்தப் பிராந்திய ஏற்றத்தாழ்வு பற்றி இன்றைய நிலைப்பாட்டையும் "அந்தக் காலம்" பற்றியும் ஒப்புநோக்கியும் வேறுபடுத்தியும் பார்க்கிறார்கள். இவர்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்கு நடக்கும் போட்டியில் தென்பகுதி மீனவர்கள் தமக்குள்ள தொழில்நுட்பம் மற்றும் பொருண்மிய மேம்பாடு காரணமாக வடக்கு, தெற்கு இரண்டுக்கும் இடையில் உள்ள சமசீரற்ற வளர்ச்சியின் எல்லா அனுகூலங்களையும் பெறுகிறார்கள்.
மீன்பிடி மற்றும் அதன் மேம்பாடு:
அரச மேம்பாட்டு நிகழ்சிநிரலில் குடாநாட்டு வாழ்வாதாரங்களுக்குக் காலாக இருக்கிற மீன்பிடித் தொழிலுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் போருக்குப் பிந்திய மேம்பாட்டுச் செயற்பாடுகள் மூலம் நன்மைகளை அறுவடை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு மீனவ சமூகங்களிடம் காணப்படுகிறது. அரச பிரதிநிதிகள் போக்குவரத்து வசதிகள் பற்றிய பொது உள்கட்டுமான அபிவிருத்திகளின் முக்கியத்துவத்தையே சுட்டிக் காட்டுகிறார்கள். மன்னார் பாலம், கல்லடிப் பாலம் மற்றும் கடலோரப் பகுதிகளில் சாலை மேம்பாடுகள் மீன்பிடி சமூகங்களையும் ஏனைய பகுதிகளில் உள்ள வியாபாரிகளையும் யாழ்ப்பாணத்தோடான சந்தை உறவுகளை விரிவாக்க உதவியுள்ளன என வலியுறுத்துகிறார்கள்.
மீன்பிடித் தொழில் பற்றிய சிறப்பு முன்னெடுப்புக்கள் தொடக்க நிலையில் உள்ளன. மீன்பிடி தொடர்பான மாவட்ட மீன்பிடி பரிமாற்று அலுவலகம் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய அலுவலகம், சில கருவிகளை வழங்கல், மீள்குடியேற்றத்திட்டத்தின் கீழ் புதிதாக மீன்பிடி ஊர்களை அமைத்தல், சட்டத்துக்கு மாறான முறைகளில் மீன்பிடிப்பதைத் தடுக்கும் சட்டங்களை இயற்றல் இன்னபிற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஆனால், வடமாகாண மீனவர்கள் பேசுவதைச் செவிமடுத்தால் அவர்கள் வேறுவிதமான "மேம்பாட்டு உரையாடலை" முன்வைக்கிறார்கள். இந்த ஆய்வுக்காகப் பல மீனவர்களை நேர்காணல் கண்டபோது அரசு அங்கொன்றும் இங்கொன்றும் ஆக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவை கடற்தொழில் சமூகங்களின் ஆதங்களைத் தீர்ப்பதாக இல்லை. வடமாகாண கடற்தொழிலாளர்கள் பருவகால மீன் பிடித்தலுக்குத் தென்பகுதிக்குப் போவதில்லை. இதற்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் வளப்பற்றாக் குறை மற்றும் வேண்டிய தொழில்நுட்பத் திறன் இல்லாமையே. பலசமயங்களில் இந்தச் சிக்கலை இனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதையும் கவனிக்க முடிகிறது.
தென்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு இராணுவத்தின் உதவி, குறிப்பாக மன்னாரில், இருப்பதாகக் குற்றம்சாட்டினார்கள். காரைநகர் கடற்தொழிலாளர்கள் தென்பகுதி கடற்தொழிலாளர்கள் வடக்குக்கு வருவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பற்றிச் சொன்னார்கள். நீர்கொழும்பு, பேருவளை மற்றும் மாத்தறை போன்ற இடங்களில் இருந்து வந்து மீன்பிடிப்பவர்கள் சுற்றுச் சூழலுக்குப் பாதகமான முறைகளைக் கையாள்கிறார்கள்.
எடுத்துக்காட்டாகக் குண்டுகளை வெடிக்க வைத்தல், சங்குகளைப் பிடிப்பதற்குக் கலன்களைப் (cylinders) பயன்படுத்தல், இறால்களைப் பிடிப்பதற்கு சின்னக்கண் வலைகளைப் பயன்படுத்தல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு சமூகத் தலைவர் பேசும்போது "இப்படியான முறைகேடுகள் அவர்களது இடங்களில் நடந்தால் அரசின் நடவடிக்கை வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால், இங்கு எந்தக் குற்றச்சாட்டுக்கும் முகம்கொடுக்காது எங்களது வளங்களை அவர்களால் அழிக்க முடிகிறது" எனக் குறிப்பிட்டார்.
புறப்பரப்புக்குள் புறப்பரப்பு: அணைவு பலப்படுத்தப்பட்டது:
வட மாகாணத்தில் தற்போது எடுக்கப்படுகிற மேம்பாடு முன்னெடுப்புக்கள் அரசியல் அணைவோடு பலப்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுப்பகுதிகளில், இதனைப் புறப்பரப்புக்குள் புறப்பரப்பு என்று கருதலாம், நிலவும் புவியியல் மற்றும் சமூக - பொருண்மிய நியதிகளைக் குறிப்பிடலாம். பல தீவுகளுக்குத் தலைநிலப் பரப்போடு தொடர்புபடுத்தும் சாலைகள் இல்லை.
அதன்காரணமாக கடற்தொழில் சமூகம் வண்டி வசதிகளை வைத்துக்கொண்டு தலைநிலப் பரப்பில் இருக்கும் சந்தையோடு தொடர்பு வைத்திருக்கும் வியாபாரிகளது தயவில் தங்கியிருக்க நேரிடுகிறது. இதனால் நீண்ட காலமாகப் பொருளாதாரத்துக்கு வியாபாரிகளது தயவில் தங்கியிருக்கும் பல வறிய மீன்பிடிக் குடும்பங்கள் துன்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இவர்கள் சந்தை மற்றும் போக்குவரத்து வசதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில வியாபாரிகளிடம் கடனாளியாகப் போய்விட்டார்கள்.
போர்க் காலத்தில் தீவுப்பகுதியின் போர்த்திற முக்கியத்துவம் காரணமாக சார்புநிலை கட்டமைப்புக்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டது. இதனை அரசியல் அணைவு ஊக்குவித்தது. மேலே விளக்கியவாறு (பொருண்மிய) மேம்பாடு ஒரு சமூகத்தை பயனடையச் செய்ய வேண்டுமென்றால் சிறிய தொழில்நுட்பச் சிக்கல்களைக் களைந்தால் மட்டும் போதாது கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
முடிவுரை:
யாழ்ப்பாணக் குடாநாட்டு கடற்றொழில் எதைக் காட்டுகிறதென்றால் இன்றைய மேம்பாட்டு மூலோபாயத்தினால் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள சமூக படிமுறையை பலப்படுத்தவும் மீட்டுருவாக்கவும் அதிகார உறவையும் மக்களிடையே ஏற்படுத்த முடியும் என்பதாகும். போர்க்காலத்துக்குப் பிந்திய மேம்பாடு வெவ்வேறு இனக் குழுமங்களுக்கு இடையே சமசீரற்ற மேம்பாட்டை உருவாக்குகிறது. இது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை மேலதிக பதட்டத்துக்கு உள்ளாக்குகிறது. வேறு விதமாகச் சொன்னால் இது இனச் சிக்கலுக்குப் பொருண்மிய மேம்பாடு தீர்வாக இருக்கும் என்ற பெரிய நம்பிக்கைக்கு எதிரானதாகும். பொருண்மிய மேம்பாடு பற்றிய அரசியல்
கலந்துரையாடல், வேறுபட்ட இனக் குழுக்களுடையே சமசீரற்ற பொருண்மிய மேம்பாட்டின் பலன்களைப் பகிரும் போது அவர்களுக்கு இடையிலான மோதலை மேலும் அதிகரிக்கலாம்.

Source: http://www.seithy.com

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator