Sunday, April 8, 2012

இலங்கை - இந்திய உறவில் விரிசல் ஏற்படுகிறதா?


ஜெனீவா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தின் போது இலங்கை விடயமாக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை அடுத்து இலங்கை இந்திய உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தான் தெரிகிறது. இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தினால் சற்று மனக் கசப்படைந்து இருப்பதாகவே தெரிகிறது.

இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவானது தனியொரு துறையை சார்ந்து இருக்காமல் என்றும் ஜெனீவா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே பகைமை உருவாகவில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார். ஆனால், ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பியவுடன் ஜெனீவாவில் தமது தோல்விக்கு இந்தியாவே காரணம் என்பதைப் போல் கருத்துக் கூறியவரும் பேராசிரியர் பீரிஸே.

இந்திய அரசாங்கம் ஜெனீவா வாக்கெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்னரே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதென்ற தமது முடிவை அறிவித்ததனால் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவிருந்த சில நாடுகள் நடுநிலை வகிக்க முடிவு செய்ததாகவும் நடுநிலை வகிக்கவிருந்த சில நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்ததாகவும் பேராசிரியர் பீரிஸ் அப்போது கூறினார். இது தமது தோல்விக்கு இந்தியாவே காரணம் என்று சூசகமாக கூறுவதாகும்.

இது உண்மைதான். பிரேணையின் உள்ளடக்கத்தைப் பார்க்காது அரசியல் நிலைமைகளின் அடிப்படையிலேயே நாடுகள் முடிவெடுக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. இலங்கையும் கூட உள்நாட்டில் கூறாத பல விடயங்களை கூறி ஜெனீவாவில் வைத்து உலக நாடுகளுக்கு வாக்குறுதிகளை வழங்கியது. அவ்வாறிருக்க பிரேரணையை முன்மொழிந்த அமெரிக்காவை குறை கூறாது அதற்கு ஆதரவளித்த நாடொன்றை குறை கூறுவது நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தப் பின்னணியில் தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் இந்தியாவில் பயிற்சி பெறுகிறார்கள் என்ற செய்தியும் மட்டக்களப்பில் மகாத்மா காந்தி சிலை உட்பட சில சிலைகள் உடைக்கப்பட்ட செய்தியும் வெளியாகியது.

கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர் ஒருவர் அண்மையில் கொல்லப்பட்டதை அடுத்து கைது செயயப்பட்ட ஒருவர் தாம் உடபட 150 பேர் இந்தியாவில் இராணுவ பயிற்சி பெற்று நாடு திரும்பியதாகவும் தமிழ் நாட்டில் புலிகள் இயக்கத்தின் முன்று பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கும் ஜெனீவா பிரேரணைக்கும் இடையே நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் அப் பிரேணையினால் இரு நாடுகளுக்கிடையே மனக் கசப்பு ஏற்பட்டு இருந்தால் அக்கசப்பு இந்த பயிற்சி முகாம் செய்தியால் வலுப்பெறுவதை தவிர்க்க முடியாது. இந்த செய்தியை இந்திய தரப்பில் உத்தியோகபூர்வமாக முக்கிய மூன்று நபர்களினால் மறுக்கப்பட்டதற்கு காரணம் அதுவாக இருக்கலாம். முதலாவதாக அது கொழும்பிலுள்ள இந்திய ஸ்தானிகராலயத்தால் மறுக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டு பொலிஸாரும் இந்திய உள்துறை அமைச்சர் பீ. சிதம்பரமும் அதனை மறுத்து கருத்து வெளியிட்டு இருந்தனர்.

இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கிடைப்பதற்கு வரலாற்றுப் பின்னணியொன்றும் இருக்கிறது. தமிழீழ போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அதாவது 1980களில் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசாங்கம் புலிகள் உட்பட சில இலங்கை தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள், பணம் மற்றும் ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை வழங்கியது. இந்தியாவில் பல பகுதிகளில் அக் குழுக்களுக்கு பயிற்சி முகாம்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இதனால் அக் காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு வெகுவாக பாதிக்கப்பட்டது.

அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் வெளிநாட்டுக் கொள்கை வெகுவாக அமெரிக்காவை சார்ந்து இருந்தது. இந்தியா அப்போது அக் காலத்தில் இருந்த சோவியத் ஒன்றியத்தை சார்ந்து இருந்தது. இந்த முரண்பாட்டின் காரணமாக இலங்கைக்கு பாடமொன்றை கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்திரா காந்தி தமிழ் ஆயுத குழுக்களுக்கு உதவி செய்தார்.

அந்தப் பின்னணியின் காரணமாகத் தான் இந்தியாவில் பயிற்சி பெற்ற 150 புலி உறுப்பினர்கள் வந்துள்ளனர் என்ற செய்தியை மறுப்பதற்கு இந்திய அதிகாரிகள் கூடுதல் அக்கறை செலுத்தினர் போலும். அதேவேளை இந்தியா இலங்கையுடனான உறவு விடயத்தில் இப்போது மிகக் கவனமாகவே நடந்து கொள்கிறது. ஏனெனில் சீனாவுடனும் இலங்கை நெருக்கமாக இருக்கிறது. இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் தள்ளக் கூடாது என்ற கருத்து அந்நாட்டில் வலுப்பெற்று வருவதே அதற்கு காரணமாகும்.

இலங்கையின் உளவுத்துறையை மேற்கோள் காட்டியே இந்தச் செய்தி வெளியாகியிருந்தது. இந்திய அதிகாரிகள் அதனை மறுத்த போது இலங்கை அதிகாரிகள் அந்த மறுப்பை மறுத்து செய்தி சரியானது தான் என்று கூற முன்வரவில்லை. உன்மையிலேயே இலங்கையின் உளவுத்துறையினரிடம் ஆதாரம் இருந்திருந்தால் இந்திய மறுப்பிற்கு பதிலளித்திருக்கலாம்.

கிழக்கில் சிலை உடைப்புக்கும் ஜெனீவா பிரேரணைக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதாக இப்போதைக்கு எவராலும் நிருபிக்க முடியாது. ஆனால் இது இடம் பெற்று இருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையை காரணமாக சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும் இவ்விரண்டையும் சம்பந்தப்படுத்தியே செய்தி வெளியிட்டு இருந்தன. எனவே இரண்டுக்கும் இடையே தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரு நாட்டிலும் அதிகாரிகளிடையே அது சந்தேகங்களை உருவாக்கியிருக்கலாம். இரு நாட்டுத் தலைவர்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அது இருநாட்டு உறவில் சில கஷ்டங்களை தோற்றுவிக்கலாம்.

இது உள்நாட்டில் இடம்பெற்ற சம்பவமாக இருந்த போதிலும் இந்திய அரசாங்கம் அதனை பாரதுரமாக கணக்கெடுத்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டமை தொடர்பாக கவலையையும் கண்டனத்தையும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சுக்கு தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், அச்சிலையை புனரமைக்க உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய சுதந்திரத்தின் தந்தையாக இந்திய மக்களால் போற்றப்படும் காந்தியின் சிலை உடைக்கப்பட்டமை இந்தியா தமக்கு ஏற்படுத்திய இழுக்காக கருதுகிறது போலும்.

அதேவேளை, இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் இது தொடர்பாக தொலைபேசியில் உரையாடி இருக்கிறார். எனவே இதைப் பற்றி விசாரணை செய்வதாக வெளியுறவுத்துறை அமைச்சும் தெரிவித்துள்ளது.

இது இலங்கைக்கு நண்பர்கள் கூடுதலாக தேவைப்படும் காலமாகும். ஏனெனில் ஜெனீவா பிரேணையோடு மனித உரிமை மீறல் தொடர்பான விடயம் முடிவடையவில்லை. ஐ.நா. மனித உரிமை பேரவையின் அடுத்தடுத்து வரும் கூட்டங்களின் போது இந்தப் பிரச்சினை இலங்கை அரசாங்கத்தை மிரட்டிக் கொண்டே இருக்கும்.

இந்தியா, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இம்முறை அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் பிரேரணையின் காரத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுத்தது. போர் நடைபெற்ற காலத்திலும் இந்தியா அரசாங்கத்திற்கே உதவி செய்தது. பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இந்திய பிரதமர் மட்டுமே அதைப் பற்றி விளக்கமளித்து இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தம்மை சீண்டுவதைப் போல் இலங்கை அதிகாரிகளோ அல்லது வேறு குழுக்களோ நடந்து கொள்வதாக இந்திய அதிகாரிகள் கருதுவதாக இருந்தால் அது இலங்கைக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இம்மாதம் இலங்கைக்கு வரவிருக்கிறது. இக் குழு வட பகுதிக்குச் சென்று நிலைமையை ஆராயவும் இருக்கிறது. இது தப்பபிப்பிராயங்களை களைய நல்ல சந்தர்ப்பமாகும். ஆனால், இது போன்ற சம்பவங்கள் அதற்குத் தடையாக அமையலாம்
Source: http://www.tamilmirror.lk/

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator