Monday, April 23, 2012

ஈழத் தமிழர் பற்றிய ரங்கராஜன் பேச்சு வடி கட்டிய பொய்- சீமான் தாக்கு

சென்னை: இலங்கைக்கு சென்று வந்த மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், உண்மைக்குப் புறம்பான வடிகட்டிய பொய்யான தகவல்களைக் கூறுவதாக நாம் தமிழர் கட்சியின் த்லைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சாத்வீகமும் ஆயுதமும்

தமிழ் ஈழத்துக்காக சாத்வீக வழியில் போராடிய தந்தை செல்வாவின் போராட்டங்களை ஆயுத வன்முறையின் மூலம் சிங்கள அரசு தொடர்ந்து ஒடுக்கியதன் எதிர்விளைவாகவே தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடங்கியது.

தமிழ் மக்களின் முழுமையாக ஆதரவுடன் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத்தான் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழர்களை அழிக்கும் இன அழிப்புப்போராக சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்தது. இரண்டரையாண்டுக் காலம் நடந்த அப்போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வடிகட்டிய பொய்


அப்படிப்பட்ட ஒரு கொடூரமான போரில் தங்கள் சொந்தங்களை இழந்தும், வாழ்விடங்களை இழந்து வாழ வழியின்றியும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயர நிலையை கண்டறியச் சென்ற நாடாளுமன்ற குழுவினர், அவர்களின் துயரத்தை போக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததைப்பற்றிப் பேசாமல், தமிழர்கள் அரசியல் தீர்வைப்பற்றி பேசுகிறார்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.

இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறுகிறார் ரங்கராசன். அப்படி ஒரு கருத்தை நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட கூறவில்லையே?

கடைந்தெடுத்த மோசடி

இலங்கை தமிழர்களின் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று ஓங்கிக் குரல் எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர், தன் கருத்தை ஈழத் தமிழர்களின் கருத்தாக அங்கு போய் விட்டு வந்து கூறுவது கடைதெடுத்த அரசியல் மோசடியாகும்.

தமிழர்கள் அரசியல் தீர்வைத்தான் விரும்புகிறார்கள். விடுதலையை அல்ல என்று கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, ஈழத் தமிழர்களிடம் விடுதலைத் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கத் தயாரா? என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது.

சுஷ்மாவின் தனி சந்திப்பு

நாடாளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்ற சுஷ்மாசுவராஜ் மற்ற உறுப்பினர்கள் அனைவரையும் தவிர்த்து விட்டு தனியாக சென்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசியிருக்கிறார். இப்படியொரு தனித்த சந்திப்பு எதற்காக என்று தெளிவுப்படுத்தப்படவில்லை. அது குறித்து மற்ற உறுப்பினர்கள் ஒருவரும் விளக்கவில்லை.

திட்டமிட்ட நாடகம்

இலங்கைக்கு சென்ற இந்திய நாடாளுன்ற குழுவில் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் இடம் பெறாததும் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இலங்கை பிரச்சினை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் என்பதும் இக்குழுவின் பயணம் ஒரு திட்டமிட்ட நாடகமே என்பதை பறைசாற்றுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator