Thursday, April 12, 2012

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

அசே: இந்தோனேசியாவின் அசே அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பாறைத் தட்டுக்களை செங்குத்தாக -அதாவது மேலிருந்து கீழாக - அசைக்கவில்லை. மாறாக, பக்கவாட்டில்தான் அது ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சுனாமி பேரலைகள் ஏற்படாமல் பூமி தப்பியுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட இந்தோனேசிய நிலநடுக்கத்தின் அளவானது 9 ரிக்டராகும். அப்போது ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளை பெருமளவில் சுருட்டிப் போட்டு விட்டது. பல லட்சம் உயிர்கள் பலியாகின, பெரும் பொருட் சேதத்தையும் ஆசிய நாடுகள் சந்தித்தன.


நேற்று இந்தோனேசியக் கடலில் ஏற்பட்ட பூகம்பமும் சாமானியமானதல்ல. அதுவும் அடுத்தடுத்து இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் 8.7 ரிக்டர் அளவிலும் பின்னர் 8.3 ரிக்டர் என்ற அளவிலும் பெரும் பூகம்பங்கள் ஏற்பட்டன. ஆனாலும் ஒரு சுனாமி அலை கூட எழவில்லை. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிக மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டும் கூட சுனாமி வராதது குறித்து விஞ்ஞானிகள் விளக்குகையில், பூகம்பமானது செங்குத்தாக, அதாவது மேலிருந்து கீழாக பாறைத் தட்டுக்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் கடல் நீர் வெளித் தள்ளப்பட்டு சுனாமி பேரலைகள் ஏற்படும். ஆனால் பக்கவாட்டில் தட்டுக்கள் நகர்ந்தால் அதனால் சுனாமி அலைகள் ஏற்படாது. நேற்றும் கூட பக்கவாட்டில்தான் தட்டுக்கள் நகர்ந்துள்ளன. இதனால்தான் சுனாமி வரவில்லை.

ஒருவேளை செங்குத்தாக பாறைகள் நகர்ந்திருந்தால் மிகப் பெரிய சேதத்தை ஆசிய நாடுகள் சந்தித்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் அவர்கள்.

Source: http://tamil.oneindia.in/news/2012/04/12/world-why-no-big-tsunami-this-time-aid0091.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator