Saturday, April 21, 2012

இந்திய உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட மட்டு. மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் நாளை திறப்பு

தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் வந்தாறுமூலையில் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமானது அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய தொழிற்பயிற்சி வளாகமாக தரமுயர்த்தப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்திய-இலங்கை நட்புறவு செயற்றிட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் கட்டிடங்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் பயிற்சி நெறிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.




திறப்பு விழாவுக்கு அதிதிகளாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பசீர் சேகுதாவூத், விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் தம்மிக ஹேவாபத்திரண ஆகியோர் வருகை தரவுள்ளனர்.

அதேநேரம் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரும் இத்திறப்பு விழாவில் விசேட அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.

மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் காணப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களை நவீன வசதிகளைக் கொண்டவையாக மாற்றியமைப்பதற்கு உதவி வழங்குமாறு 2009 இல் இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தது.

இதனடிப்படையில் இலங்கைக்கு ஆய்வுக்கு குழு ஒன்றினை அனுப்பியிருந்த இந்திய அரசு மட்டு. மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் உட்பட இரு நிலையங்களை செயற்றிட்டத்திற்கென தெரிவு செய்தது. இதற்கமைய மட்டு. மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தினை மறுசீரமைக்கும் செயற்றிட்டப்பணிகள் 2011 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

இந்திய-இலங்கை நட்புறவு செயற்றிட்டத்தின் கீழ் மட்டு. மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமானது தேசிய தொழிற்பயிற்சி வளாகமாக தரமுயர்த்தப்படுவதன் மூலம், நாட்டின் 5ஆவது தேசிய தொழிற்பயிற்சி வளாகமாக இது திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37668

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator