Tuesday, May 8, 2012

“சொந்தக் கிராமத்தில் மீள் குடியேற உதவுங்கள்” முள்ளிக்குளம் மக்கள் அரச அதிபருக்கு மகஜர்


“சொந்தக் கிராமத்தில் மீள் குடியேற உதவுங்கள்” முள்ளிக்குளம் மக்கள் அரச அதிபருக்கு மகஜர்

May 8, 2012 No Comments by Voice Of Mannar


“சொந்தக் கிராமத்தில் மீள் குடியேற உதவுங்கள்” முள்ளிக்குளம் மக்கள் அரச அதிபருக்கு மகஜர் இடம் பெயர்ந்து வாழும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் தம்மை மீண்டும் சொந்த மண்ணில் மீள் குடியேற்றக் கோரி அண்மையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். இந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முள்ளிக்குளம் கிராமத்தைச் சொந்த இடமாகக் கொண்டு தற்போது அகதிகளாக மன்னார் பேசாலை, தாழ்வுப்பாடு மற்றும் ஏனைய கிராமங்களில் வாழும் எங்களை மீண்டும் சொந்த மண்ணில் குடியமர்த்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
எமது மீள் குடியேற்றத்திற்காக அரச அதிகாரிகள், இராணுவம் மற்றும் முள்ளிக்குளம் கடற்படையினர், மக்கள் இணைந்து எமது கிராமத்துக்கு அருகாமையில் ஓர் காணி நிலம் தெரிவு செய்யப்பட்டதுடன், எமது மீன்பிடி தொழிலுக்கான ஓர் கடற்பகுதியும் வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்து விட்டன. மேற்படி எமது குடியமர்வு சம்பந்தமாக கடந்த மாதம் கீரி குழந்தை யேசு ஆலயத்தில் ஓர் கூட்டம் நடைபெற்றதுடன், இக்கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட செயலாளர், நானாட்டான் பிரதேச செயலாளர், மறைமாவட்ட குரு முதல்வர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கூட்டத்தில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஓர் கூட்டம் ஒன்றின் ஊடாக அவர்களின் சில அடிப்படை வசதிகளான மீன்பிடி, விவசாய உபகரணங்கள் மற்றும் கொட்டில்கள் அமைப்பதற்காக மரம், கிடுகு பெற்று எம்மை மீள் குடியமர்த்துவதற்கான ஓர் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட செயலாளரினால் கூட்டத்தில் கூறப்பட்டிருந்தது. எனினும் இதுவரை எவ்வித முன்னேற்றப்பாடுகளும் மேற்கொள்ளப்படாமை கவலையளிக்கின்றது. தற்போது நாம் குடியிருக்கும் காணிகள் அனைத்தும் தனியாருடையதால் அவர்களும் தம் காணிகளை விட்டு எம்மை வெளியேறுமாறு நாளாந்தம் நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எம்மிடையே கசப்புணர்வுகளும் மனவேதனையும் ஏற்பட்டுள்ளது.
எமக்கு நிரந்தர தொழில் இல்லை கூலி வேலை எப்போதும் கிடைக்காமையால் எமக்கு நிரந்தர வருமானம் இல்லை. அரச பங்கீட்டு உலர் உணவு எமது சீவியத்திற்கு போதாமையுள்ளதுடன், உரிய நேரத்திற்கு கிடைப்பதும் இல்லை. இதனால் நாங்கள் பல நாட்கள் பட்டினியுடனேயே வாழ்கின்றோம். எனவே எமது அகதி நிலை கஷ்ட துன்பங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு எம்மை உடன் எமக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் மீளக் குடியமர்த்தி எமது விவசாய, மீன்பிடி தொழில்களில் ஈடுபட ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator