மன்னார் நிருபர்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை வைத்திருந்த சந்தேகத்தில் மன்னார் இலுப்பைக் கடவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் மன்னார் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவர் தொடர்பாக மன்னார் இராணுவக் கட்டளைத் தளபதியை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை இலுப்பைக் கடவை காட்டுப்பகுதியில் ஆறு பேர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் அந்தக் குழுவினர் தொடர்பாக அப்பகுதி இராணுவத்தினர் இலுப்பைக் கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இந்நிலையில் காட்டுப் பகுதிக்கு விரைந்த இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்படி ஆறு பேரையும் கைது செய்தனர். கைதான அறுவரில் ஒருவரிடம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றை குழல் வேட்டைத் துப்பாக்கியொன்றும் அதற்கான ரவைகள் ஐந்தும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கைதானவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணைகளையடுத்து, துப்பாக்கி வைத்திருந்த வரை மட்டும் நேற்று பிற்பகல் மன்னார் நீதிமன்றில் மாவட்ட மேலதிக நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர்செய்தனர்.
இதையடுத்து ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் சந்தேக நபரை மேலதிக நீதிவான் யூட்சன் விடுதலை செய்தார். அத்துடன் எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றில் சந்தேகந பரை ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக மன்னார் இராணுவக் கட்டளைத் தளபதியை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான பூரண அறிக்கையொன்றை மன்றில் சமர்ப்பிக்குமாறும் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
http://www.thinakkural.com/news/all-news/local/14312-2012-05-11-13-25-58.html
No comments:
Post a Comment