திருக்கேதீஸ்வரத்தில் தங்கள் காணியில் தங்களது அனுமதியைப் பெறாது புத்தர் சிலை அமைக்கப்பட்டதானது தங்களது அடிப்படை உரிமையை மீறுவதாகவும் தங்களது உரிமையை பாதுகாக்குமாறும் கோரி, காணியின் உரிமையாளரான சேர் கந்தையா வைத்தியநாதனின் வாரிசுகள் சர்வதேச மனித உரிமை மன்றுக்கு முறையிடுவதற்காக லண்டனில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருகின்றனர்.
வரலாற்றுப் புகழ்மிக்க பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியில் எஸ்.677 அரச காணி உறுதிப்பத்திரத்தையும் 15 என்ற காணித்துண்டு இலக்கத்தையும் கொண்ட காணியானது சேர் கந்தையா வைத்தியநாதனின் வழிவந்த வாரிசுகளுக்குச் சொந்தமானதாகும்.
இக் காணியில் எவ்வித முன்னறிவித்தல்களோ அனுமதியோ இன்றி சட்டவிரோதமாக கட்டிட நிர்மாண வேலைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக திருக்கேதீஸ்வர வளாகத்தில் புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்டு அதனைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட வேளை அகில இலங்கை இந்து மாமன்றம் உட்பட பல இந்து அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து அம்முயற்சி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அடிப்படை மனித உரிமையை மீறும் செயலும் நிரந்தரமான, நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்ய சேர்.கந்தையா வைத்தியநாதனின் வாரிசுகள் தீர்மானித்துள்ளனர்.
தனியார் ஒருவரது காணியில் இவ்வாறு அத்துமீறி மேற்கொள்ளும் செயலானது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 10, 12 (1உ) சரத்துக்கு முரணானதாகுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.thinakkural.com/news/all-news/local/14305-2012-05-11-13-16-49.html
No comments:
Post a Comment