Friday, May 25, 2012

மன்னாரில் றிசாட் பதியூதீனிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி!

மன்னாரில் றிசாட் பதியூதீனிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி!மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு எதிராக அமைச்சர் றிசாட் பதீயுதீன் நாடாளுமன்றத்தில் அவதூராக பேசியமையினை கண்டித்து மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தினுள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன நிகழ்வினை நடத்துவதற்கு மன்னார் நீதவான் ஏ.யூட்சன் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளார்.
குறித்த நிகழ்வு தொடர்பில் ஐந்து அருட் தந்தையர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸாரினால் கடந்த 23ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் ஏ.யூட்சனினால் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த ஐந்து அருட் தந்தையர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்திருந்தமை, வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த போகின்றமை மற்றும் அமைச்சர் றிசாட் பதீயுதீனின் கொடும்பாவி எரியூட்டப்பட போகின்றமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், "ஆலய வளாகத்தினுள் இடம்பெறுகின்ற எந்த நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் வீதியில் எவ்விதமான கண்டன ஆர்ப்பட்டங்களோ பேரணிகளோ நடத்தக்கூடாது" என உத்தரவிட்டார்.
குறித்த பேரணி வீதியில் இடம்பெறுகின்ற போது இரண்டு சமூகங்களுக்கு இடையில் பாரிய பிரிவினை ஏற்படக்கூடும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் குறித்த நிகழ்வு ஆலய வளாகத்தினுள் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும் அவை வீதிக்கு வெளியில் இடம்பெறக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
குறித்த நிகழ்வின் போது மன்னார் பொலிஸார் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அந்நிய சக்திகள் குறித்த நிகழ்வில் வன்முறையினை தூண்டாத வகையில் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் மன்னார் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator