யாழ்.பல்கலைக்கழகத்தில்
உள்ள உணவகத்தில் சுகாதாரச் சீர்கேடான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக
மாணவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டை அடுத்து அங்கு சென்ற
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அங்குள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி
அவற்றைச் சீர்செய்யுமாறு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
ஒரு வார காலத்தினுள் உரிய நடவடிக்கை
எடுக்கத்தவறும் பட்சத்தில் மேலதிகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது
சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் உணவகத்துக்குச் சென்ற
பல்கலைக்கழக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அங்கு தரமற்ற 50 வடைகளை
இனங்கண்டு அழித்துள்ளனர்.
அத்துடன் நேற்றுமுன்தினம் அங்கு
விற்பனை செய்யப்பட்ட சோற்றுப் பொதி ஒன்றில் புழு இருந்ததையும் மாணவர்கள்
சுட்டிக்காட்டினர். இதுகுறித்து பல்கலைக்கழக சுகாதாரப் பகுதியினருக்கு
முறையிடப்பட்டது.
ஏனைய பல்கலைக்கழகங்களைப் போன்று தமக்கு
இங்கு தரமான உணவு கிடைக்க வழி ஏற்படுத்துமாறும் மாணவர்கள் அப்போது
கோரிக்கை விடுத்தனர். "இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பல தடவை
முறையிட்ட போதும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை''
என்றும் மாணவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்ட போதும் இரண்டு தடவைகள் உணவகம் மாணவர்களால் இழுத்து மூடப்பட்டது.
பின்னர் வேறு ஒப்பந்தக்காரர்களிடம்
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உணவு தரமற்றதாகவும், போசாக்கு
இன்றியும், சுகாதாரமற்ற முறையிலும், உள்ளதாக மாணவர்கள் குறைப்படுகின்றனர்.
மாணவர்களின் முறைப்பாட்டை அடுத்து
பல்கலைக்கழக பதிவாளர் நேற்று உணவகத்துக்குச் சென்று நிலைமையைப்
பார்வையிட்டார். நல்லூர் பொதுச் சுகாதார பரிசோதகர் எல்.எஸ்.ஜெபராசா மற்றும்
பொதுச் சுகாதார பரிசோதகர் ஜி.மதன்குமார் ஆகியோரும் நேற்று உணவகத்துக்குச்
சென்று பார்வையிட்டனர்.
நேற்றைய தினமும், சுகாதாரத்துக்குக்
கேடான வகையில் அச்சுப்பதிக்கப்பட்ட கடதாசிகளில் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ
கிராம் றொட்டிகளும் அழிக்கப்பட்டன.
உணவகத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ அறிக்கை பெற வேண்டும்.
அங்குள்ள தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட
வேண்டும். தூசி படிந்துள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்படல் வேண்டும். உணவின்
தராதரம் பேணப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டு ஒரு வாரகால
அவகாசமும் வழங்கப்பட்டது'' என்று சுகாதார அதிகாரிகள் கூறினர்.
Source:http://184.107.230.170/~onlineut/News_More.php?id=46954991419791025
No comments:
Post a Comment