Sunday, April 22, 2012

தமிழீழத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளது ஏன்? - தினமலர்

தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த, 17ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "தனி ஈழம்' என்பது, தன் நிறைவேறாத ஆசை என்றும், "தனி ஈழம்' வழங்க, தமிழர்கள் மத்தியில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறி, தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இலங்கையில், தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து, தனி நாடு உருவாக்குவதே தனி ஈழம்.
கடந்த, 1986ல், மதுரையில் நடந்த தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு(டெசோ) மாநாடு, கருணாநிதி, வீரமணி, நெடுமாறன் தலைமையில் நடந்தது. இம்மாநாடு, இலங்கை இனப் பிரச்னையை மையமாக வைத்து போராடிய அமைப்புகளான, விடுதலைப் புலிகள் இயக்கம், ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்த மாநாடு நடந்து, ஒரு சில தினங்களில், டெலோ அமைப்பின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டார். இதையடுத்து, தனி ஈழம் கோரிக்கையை தி.மு.க. கைவிட்டது. இந்நிலையில், 26 ஆண்டுகளுக்குப் பின், கடந்த, 17ம் தேதி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனி ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதன் மர்மம் என்ன என்பது தெரியாமல், அரசியல் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கருணாநிதியின் திடீர் பல்டிக்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் தம்பி கோத்தபய ராஜபக்ஷேயும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர்,"இலங்கையில் உள்ள தமிழர்களை கருணாநிதி தூண்டி விடக் கூடாது. எங்கள் நாடு, சுதந்திரமான நாடு. இங்கு ஈழத்தை உருவாக்கும் முயற்சியில், கருணாநிதி ஈடுபடக் கூடாது. இலங்கையில் உள்ள தமிழர்களை விட, தமிழகத்தில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். அவர் விருப்பப்பட்டால், தமிழகத்தில், தனி ஈழத்தை உருவாக்கட்டும்' என, கூறியுள்ளார்.
இத்தகைய கேலி பேச்சுக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம், கருணாநிதிக்கு ஏன் வந்தது என்பது தான் இப்போதைய கேள்வி. கருணாநிதியின் இந்த பல்டிக்கு, உள்ளூர் அரசியல் தான் காரணம் என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "முதல்வர் ஜெயலலிதா, காங்கிரசுடன் நெருங்கி வருவதாகவும், அதற்கேற்ப, டில்லியில் காய் நகர்த்தப்படுவதாகவும் சில,"சிக்னல்'கள் கருணாநிதிக்கு கிடைத்துள்ளன.
காங்கிரசுக்கு, "செக்' வைக்கவே கருணாநிதி, "தனி ஈழம்' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்' என, அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார். தி.மு.க., தலைவரின் இந்த புது நாடகம், அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator