Sunday, April 22, 2012

மகிந்தவின் மானத்தை காத்ததற்கு கைமாறாக பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது- றம்ழான்!

ஜெனிவாவில் உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக நின்ற வேளையில் மகிந்த ராசபக்சவினதும் இலங்கை அரசாங்கத்தினதும்  மானத்தையம் மரியாதையையும் காக்க துணிந்து நின்று செயற்பட்ட முஸ்லிம்களுக்கு கைமாறாக தம்புள்ள நகரிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாயல் பேரினவாதிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களும் உடனடியாக விழித்தெழுமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் கேட்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தம்புள்ள நகரில் நீண்ட காலமாக உள்ள  முஸ்லிம்களின் ஜும் ஆ பள்ளிவாசலை உடைப்பதற்கு கடந்த சில தினங்களாக முயற்சித்து வந்த பெரும்பான்மை சமூகத்தைச்சேர்ந்த சிலர்  இன்று வெள்ளிக்கிழமை அங்கு ஒன்று கூடி பள்ளிவாயலை உடைத்துள்ளனர்.
இதன் போது அப் பள்ளி வாயலினுள் இருந்த முஸ்லிம்களை இராணுவத்தினரும் பொலிசாரும் வெளியேற்றியதன் பின்பு பொலிசாரும் இராணுவத்தினரும் பார்த்துக்கொண்டு நிற்கும் போதே இந்த மஸ்ஜித் உடைக்கப்பட்டுள்ளது.
பெரும் கூட்டமாக ஆர்ப்பாட்டமாகச் சென்ற காவி உடை தரித்தவர்களும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களும் இந்த ஜும் ஆ பள்ளிவாயலை உடைத்துள்ளதுடன் அந்த இடத்தில் பள்ளிவாயல் அமைக்கக் கூடாது எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
முதலில் பள்ளிவாயலை முற்றுகையிட்டு நின்ற இவர்கள் பின்னர் பள்ளியினுள் புகுந்து பள்ளிவாயலினுள் இருந்த அனைத்தையும் சேதப்படுத்திய பின்னர் பள்ளி வாயலையும் உடைத்துள்ளனர். இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிப்பதுடன் முஸ்லிம்கள் ஜெனீவாவில் இலங்கை அரசின் பக்கம் செயற்பட்டதுக்கு இது கைமாறா எனவும் கேட்கத் தோன்றுகின்றது.
இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் உனடியாக விழித்தெழுந்து இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அப்பள்ளிவாயலை மீண்டும் அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: http://www.thinakkathir.com/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator