
இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் கடந்த 1992 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் அறிவிப்பாணை மூலம் இந்தத் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.5.10 2010 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கலாமா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
இந்த தீர்ப்பாயத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட பலர் ஆஜரானார்கள். என்றாலும், மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை உறுதி செய்து கடந்த 12.11.10 அன்று தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார். அதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் புகழேந்தியும் மனு தாக்கல் செய்துள்ளார். நீண்ட நாட்களாக இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜரானார். மனுதாரர் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் வைகோ ஆஜரானார்கள்.
வைகோ வாதிடுகையில்," இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துடன் தமிழகத்தையும் இணைப்பதற்கு விடுதலைப்புலிகள் முயற்சிக்கின்றனர் என்ற காரணத்தைக் கூறிதான் தீர்ப்பாயத்தின் மூலம் அந்த இயக்கத்துக்கு தடை பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ஒரு பிடிமண் கூட இலங்கைக்கு வராது என்று இயக்கத் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். தமிழகத்தை ஈழத்துடன் இணைப்பதற்கு விடுதலைப்புலிகளுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை.
ஈழத்தில் தமிழர்களை அழிப்பதற்கு பல்வேறு நாடுகளும் ஆயுத சப்ளை செய்துவரும் நிலையில், அங்கு தமிழ் ஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு என்று பேசியவர்கள் கொளத்தூர் மணி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவது குற்றமாகாது என்று இதே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது" என்றார்,
அதேப்போன்று புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணனும் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், "எந்த இயக்கம் தடை செய்யப்பட்டதோ, அந்த இயக்கத்துக்கு நிவாரணம் கோருவதற்காக அதன் உறுப்பினரோ அல்லது நிர்வாகியோதான் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வைகோ உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ இல்லை. எனவே இந்த வழக்கை தொடர அவருக்கு தகுதி இல்லை.
விடுதலைப்புலிகளுக்கு தடை செய்து தேசிய தீர்ப்பாயம்தான் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து உயர் நீதிம்ன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. உயர் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும்.
அந்த இயக்கத்தை ஏன் தடை செய்தோம்? என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதற்கான ஆவணங்களும் உள்ளன. தேச நலன் கருதி அவற்றை வெளியிட முடியாது" என்றார்.
இந்த இருத்ரப்பு வாதததை தொடர்ந்து, இந்த வழக்கை நீதிமன்றம் வருகிற 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Source: http://news.vikatan.com/?nid=7466#cmt241