Tuesday, April 10, 2012

டீசல் மானியம் வேண்டின் உடன் காப்புறுதி கட்டாயம்; வற்புறுத்தலால் மட்டு. மீனவர்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் உடனடிக் காப்புறுதியில் இணைந்தால் மட்டுமே எரிபொருள் மானியம் வழங்கப்படும் என்று நீரியல் வளத்திணைக்களம் நிபந்தனை விதிப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தக் காப்புறுதி செய்யாத மீனவர்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது என்று மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல் வள உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புதுவருட காலத்தில் மீன்பிடி குறைவான வேளையில் காப்புறுதிக்கு நிர்ப்பந்திப்பது கவலை அளிக்கின்றது என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு, கடலில் மீன் உற்பத்தி குறைவு, குழந்தைகளுக்கான கல்விச்செலவு எனப் பல்வேறு பிரச்சினைகளால் பாதிப்புறும் தமக்கு காப்புறுதி செய்தால்தான் எரிபொருள் மானியம் வழங்கப்படும் எனக்கூறுவது பொருத்தமற்ற செயல் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல்வள உதவிப் பணிப்பாளர் தொமிங்கு ஜோர்ஜ் உடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
மீனவர் காப்புறுதி வருடத்துக்கு 750 ரூபா செலுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மிகக் குறைந்தளவு மீனவர்களே இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்தக் காப்புறுதியில் இணைந்து கொள்வதனால் பிள்ளைகளுக்குக் கல்வி உதவி, விபத்துக்களின்போது நிதியுதவி எனப் பல வசதிகள் உள்ளன. இதனாலேயே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. காப்புறுதித்திட்டத்தில் இணைந்து கொள்ளாததால் மட்டக்களப்பு, செங்கலடிப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்த உயிரிழப்புக்களின்போது எந்தவிதமான நட்டஈடும் அவர்களின் குடும்பங்களுக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலைமையை இல்லாது செய்வதற்காகவே காப்புறுதி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.விவேகானந்தன் "இந்தக் காப்புறுதித் திட்டம் மீனவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைச்சின் அறிவுறுத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வருட கால காப்புறுதியை மீன்பிடி அதிகமான காலத்தில் செய்யத்தூண்டுவது பொருத்தமானதாகும்''. என்றார்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator