Tuesday, April 24, 2012

உயிரைப் பணயம் வைத்தாவது புத்த தர்மத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயார்: பிரதமர் _

இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது கலந்துரையாடல்களின் மூலம் ஒரு தீர்வுக்கு வருவதே அதனைத் தீர்ப்பதற்குரிய பொருத்தமான வழிமுறையென பிரதமர் தி.மு. ஜயரத்ன வலியுறுத்தினார்.

சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகரமாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின் போது சகல தரப்பினர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றிற்குச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். நேற்று முன்தினம் கலகெதர, ஹதறலியத்த பிரதேசத்தில் நடைபெற்ற வைவபம் ஒன்றில் கலந்து கொண்டே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



ஹதரலியத்த, பெலேன போதிமால காராம விகாரைக்கு பத்து மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட தர்ம போதனை நிகழ்த்தும் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டே மேற்கண்டவாறு கூறினார்.

வரலாற்றுப் புகழ்மிக்க ரங்கிரி தம்புலு புனித பூமி பிரதேத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சமய புனிதஸ்தலம் சம்பந்தமான பிரச்சினையையும் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறிய பிரதமர் , அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

""தம்புள்ளை புனிதப் பூமிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் முஸ்லிம் பள்ளிவாசல் சம்பந்தமாக நான் விசாரித்துப் பார்த்தேன். தம்புள்ள பிரதேசத்திற்கு வரும் முஸ்லிம் வியாபாரிகள் தமது சமயக் கிரியைகளை மேற்கொள்வதற்காக கட்டப்பட்ட பள்ளிவாசலான இது சுமார் பத்து வருட வரலாற்றைக் கொண்டதாகும். இந்தப் பள்ளிவாசல் சம்பந்தமாக எனக்கு எவ்வித தகவல்களையும் எவரும் வழங்கவில்லை. ஆனாலும் சென்ற தினங்களில் பல ஊடகங்களில் முஸ்லிம் பள்ளிவாசல் சம்பந்தமாக பல அறிக்கைகள் விடப்பட்டன. அதற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிணைக் கூட பிரதேச வாசிகள் நடத்தியிருந்தார்கள்.

புத்தசாசனத்தைப் பாதுகாத்துப் போஷிப்பதாக அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரைப் பணயம் வைத்தாவது புத்த தர்மத்தைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டள்ளது. ஆனாலும் ஏனைய மதங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதற்கு அகௌரவப்படுத்துவதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை.

நாம் இன, மத மற்றும் கலாசார ரீதியாக வேறுபட்டிருந்தாலும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. எப்படியிருப்பினும் தம்புள்ள புனித பூமிப் பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலினை வேறோர் இடத்தில் நிர்மாணிப்பதற்கு தற்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன மற்றும் மத ரீதியாகக் கருத்த முரண்பாடுகள் ஏற்படும் வகையில் நாம் தீர்மானங்களை எடுக்கக் கூடாது. இனம், மதங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புணர்வுடன் செயலாற்றும் இத்தருணத்தில் இவ்வாறான அற்ப விடயங்களை அடிப்படையாகக் கொண்ட இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் செயலை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

இன்று நடைபெறும் இந்த வைபவம் பௌத்த விஹாரையொன்றில் நடைபெற்றாலும் இதற்காக இந்தப் பிரதேசத்தில் வாழும் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதிலிருந்து இந்தப் பிரதேசத்தில் நிலவும் சமய ரீதியான ஒற்றுமை முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக உள்ளது'' என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் தும்பனை பிரதேச பிரதம தலைமைத்தேரர் சங்கைக்குரிய வேத்தேவே தம்மாலங்கார தேரர் போதிமால காராம விஹாரையின் அதிபதி சங்கைக்குரிய மகுத்தல உபரதன தேரர் உட்பட மகா சங்கத்தினர்களும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வும் பிரதமரின் பிரத்தியேகச் செயலாளர் அனுராத ஜயரத்ன தும்பனை பிரதேச சபையின் உப தலைவர் உபாலி குமாரசிங்க வர்த்தகர் எல்.எம். நயீம் ஹாஜியார் மற்றும் ஏராளமான பிரதேச வாசிகளும் கலந்து கொண்டனர். ___
Source: http://www.virakesari.lk/

1

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator