மூன்று
மில்லியனுக்கும் மேற்பட்ட உலகளாவிய ஆதரவாளர்களைக் கொண்ட அனைத்துலக
மன்னிப்புச் சபை 2011 டிசம்பர் 10ம் நாள் தனது ஜம்பது வருட வாழ்வை நிறைவு
செய்துள்ளது. பீற்றர் பெனன்சன் (Peter Benenson) என்ற பிறிட்டிஷ் வழக்கறிஞர் தனி மனிதனாக இந்த அமைப்பபைத் தோற்று வித்தார்.
போத்துக்கல்
நாட்டு இரு இளம் மாணவர்கள் அடக்கு முறைக்கு எதிராகக் கோசமிட்டதற்காக
1961ம் ஆண்டு சிறை வைக்கப்பட்டார்கள். இதை அறிந்த பீற்றர் பெனன்சன் தனது
ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஒப்சேவர் பத்திரிகை வாயிலாக
“மறக்கப்பட்ட கைதிகள்” (The Forgotten Prisoners) என்ற கட்டுரையைப் பிரசுரித்தார்.
அந்தக் கட்டுரையில் அவர் “மன்னிப்புக்கு மனு 1961” என்ற கோரிக்கையை (Appeal to amnesty 1961)
விடுத்தார். அதற்கு உலகளாவிய வரவேற்பு கிடைத்தது. உலகப் பத்திரிகைகள்
அவருடைய கட்டுரையை மறுபிரசுரம் செய்தன. பீற்றர் பெனன்சன் விடுத்த
“நடவடிக்கைக்கு அழைப்பு” (Call to action) சிந்திக்கும் மனிதர்களின் மனச்சாட்சியைத் தொட்டது.
இது தான் அம்னெஸ்ரி இன்டர்நாஷனல் (Amnesty International)
தோற்ற வரலாறு. அதனுடைய சர்வதேச மாநாடு யூலை 1961ல் நடைபெற்றது. பெல்ஜியம்,
ஜக்கிய இராச்சியம், யேர்மனி, அயர்லாந்து, சுவிற்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய
நாடுகளில் இருந்து பேராளர்கள் வருகை தந்தனர்.
“கருத்துச்
சுதந்திரம் மதச் சுதந்திரம் ஆகியவற்றிற்கான நிரந்தர அனைத்துலக அமைப்பை
ஆரம்பிப்பதென்று” இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இலண்டன், மீற்றர்
கோட் (Mitre Court) பீற்றர் பெனன்சன் வழக்கறிஞர்
அலுவலகத்தில் சிறிய அலுவலகத்தையும் நூலகத்தையும் இந்த அமைப்பிற்காகத்
திறப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இன்று
வளர்ச்சி அடைந்த நிலையில் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பணிகள் அனைத்துலக
மட்டத்தில் மனித உரிமைகளுக்காக உழைத்தல், பெண் உரிமைகளைப் பாதுகாத்தால்,
சித்திரவதைகளையும் மரண தண்டனையும் நிறுத்துதல், மனச்சாட்சியின்
வழிகாட்டலில் போரிட்ட சிறைக் கைதிகளின் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்தல்
என்பனவாகும்.
மனச்சாட்சிக் கைதிகளின் (Prisoners of Conscience) விடுதலையை
தனது முக்கிய பணியாக மன்னிப்புச் சபை கொண்டுள்ளது. அரசியல் கைதிகள்
காலதாமதமின்றி நீதி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதி விசாரணை
துரிதமாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.
அரசியல்
படுகொலைகள் தொடர்பான நடவடிக்கைகளை மன்னிப்புச் சபை 1979ம் ஆண்டு எடுக்கத்
தொடங்கியது. அதே வருடம் ஆர்கென்டீனா நாட்டில் சாவாதிகாரி யோர்கே விடால் (Jorge Vidal)
ஆட்சியில் நடந்த 2,665 காணாமற்போதல்களை மன்னிப்புச் சபை ஆவணப் படுத்தியது.
1983ல் அரசுகளின் அரசியல் படுகொலைகள் பற்றிய விசேட அறிக்கையை அது
வெளியிட்டது.
பின்லாந்துத்
தலைநகர் ஹெல்சிங்கியில் நடந்த 1985ம் ஆண்டு மாநாட்டில் அகதிகள்
பிரச்சனையில் கவனம் எடுப்பதற்கு மன்னிப்புச் சபை தீர்மானித்தது.
இதற்கிடையில் மன்னிப்புச் சபையின் அனைத்துலக நிறைவேற்றுக் குழுத் தலைவர்
சோன் மெக் பிறைட் (Sean Mc Bride) அவர்களுக்கு 1973ம் ஆண்டிற்கான நோபெல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
1966,1967ம்
ஆண்டுகளில் இந்தியா, அமெரிக்கா, நீயூ சீலாந்து பின்லாந்து ஆகிய நாடுகளில்
கிளைகள் திறக்கப்பட்டன. 1987ல் அமெரிக்க நீதித் துறை பற்றி மன்னிப்புச் சபை
வெளியிட்ட அறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மரண தண்டனை வழங்கலில்
அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் கூடுதலாகத் தண்டிக்கப்;படுகிறார்கள் என்று
அது குற்றஞ் சாட்டியது.
இந்தியாவில்
பழங்குடியினரின் வாழ்விடங்களை சுரங்கத் தொழிலுக்காகப் பறிமுதல் செய்யும்
அரச நடவடிக்கைக்கு எதிராக மன்னிப்புச் சபை போராடுகிறது. இந்தியாவின்
கிழக்குப் பிராந்திய நியாம்கிரி மலைப் பகுதியில் பல்தேய வர்த்தக நிறுவனமான
வேதாந்தா போக்சைற் (Bauxite) தோண்டுவதற்கு எடுத்த முயற்சியை மன்னிப்புச் சபை தடுத்து நிறுத்தியது.
நியாம்கிரி
மலைவாழ் தொன்கியா கொன்ட் மக்களின் வாழ்விடங்கள் போக்சைற் சுரங்கங்கள்
மூலம் பறிபோகும் என்று மன்னிப்புச் சபை அறிக்கையிட்டு அரசுக்கு அழுத்தம்
கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கிய
அனுமதியை நிறுத்தியது.
ஜநாவுக்கும் மன்னிப்புச் சபைக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஜநாவுக்கு ஆலோசனை வழங்கும் அந்தஸ்தை(Consultative status) மன்னிப்புச் சபைக்கு ஜநா வழங்கியது. 1969ல் அதே அந்தஸ்தை ஜநாவின் கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பு (UNESCO) மன்னிப்புச் சபைக்கு வழங்கியது.
அனைத்துலக
மன்னிப்புச் சபை தனது முப்பது வருட நிறைவை 1991ல் கொண்டாடிய போது தனது
பணியை மேலும் விரிவு படுத்தியது. ஆயுதக் குழுக்களின் அத்துமீறல்கள், பணயக்
கைதிகளைப் பிடித்தல்கள், பாலியல் வேறுபாடுகளுக்காக ஆண், பெண் இரு
பாலாரையும் சிறைப் பிடிப்பது ஆகியவற்றிற்கு எதிராகப் பணியாற்ற
தீர்மானிக்கப்பட்டது.
உலகின்
மிகப் பெரிய சுயாதீனமாக இயங்கும் மனித உரிமை அமைப்பாக மன்னிப்புச் சபை
2005ல் அங்கீகரிக்கப்பட்டது. அதே வருடம் நிறுவனர் பீற்றர் பெனன்சன் 83ம்
அகவையில் காலமானார். 2009ம் ஆண்டில் மன்னிப்புச் சபைக் கிளைகள் பெருமளவு
நாடுகளில் செயற்படத் தொடங்கின. 150 உலக நாட்டு மக்கள் அதன் தீவிர
ஆதரவாளர்களாகச் செயற்பட்டனர்.
1996ம்
ஆண்டு தொடக்கம் ஒரு நிரந்தர அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றம் திறக்கப்பட
வேண்டும் என்பதற்காக மன்னிப்புச் சபை ஜநா உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம்
கொடுக்கத் தொடங்கியது. ஜநா பொதுச் சபை யூலை 1998ல் இதற்குச் சாதகமான
தீர்மானத்தை நிறைவேற்றியது.
அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தை (International Criminal Court)
உருவாக்கும் ரோம் உடன்படிக்கை அறுபது நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு
01 யூலை 2002ம் நாள் இந்த நீதி மன்றம் செயற்படத் தொடங்கியது.
“குற்றப் பங்காளிகள்” (Partners in Crime)
என்ற தலைப்பில் அமெரிக்காவையும் ஜரோப்பிய நாடுகளையும் சமஅளவில்
கண்டிக்கும் அறிக்கையை மன்னிப்புச் சபை 2006ம் ஆண்டில் வெளியிட்டுப் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
தீவிரவாதிகள்
என்று அமெரிக்க அரசு தீர்மானித்தோரை சட்டத்திற்குப் புறம்பான விதத்தில்
அது கைது செய்ததையும் ஜரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புடன் அவர்களை
சித்திரவதை நாடுகளுக்குக் கடத்திச் செல்லும் விமானங்களுக்கு அனுமதி
வழங்கியதையும் இந்த அறிக்கை கண்டித்தது.
அதன்
பிறகு இந்த வகை கடத்தல் நடவடிக்கைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன.
அனைத்துலக மன்னிப்புச் சபை கைதிகள் சிறையில் நடத்தப்படும் விதம் பற்றி
நெடுகாலமாக கவனம் எடுக்கிறது. தனது முதலாவது அறிக்கையை 1965ல் போத்துக்கல்,
தென்னாபிரிக்கா, நூமேனியா தொடர்பாக வெளியிட்டது.
2006,2007ம்
ஆண்டுகளில் சூடான் அரசு டாபூர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இன அழிப்பு
நடவடிக்கைகளைக் கண்டித்ததோடு பலமுள்ள ஜநா அமைதிப்படை டாபூரில் நிறுத்தப்பட
வேண்டும் என்று அது ஜநாவைக் கோரியது.
இலங்கையில்
நடந்த இன அழிப்புப் போருக்கு மன்னிப்பு சபை உரிய முக்கியத்துவம்
கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தகுந்த காரணத்துடன் அதன் மீது
சுமத்தப்படுகிறது. டாபூரிலும் கூடிய எண்ணிக்கையில் தமிழீழ மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை நிறுத்துவதற்கு மன்னிப்புச் சபை ஜநா மீது
அழுத்தம் கொடுக்கத் தவறியுள்ளது.
எனினும் 2012 மார்ச் 13ம் நாள் “விசாரணையின்றித் தடுப்பு” (Detention without trial)
என்ற தலைப்பில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டன அறிக்கையை மன்னிப்புச் சபை
வெளியிட்டுள்ளது. நூற்றுக் கணக்கான மக்கள் சட்டத்திற்குப் புறம்பான
விதத்தில் பெரும்பாலும் வெளித் தொடர்பின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
என்று அது கூறுகிறது.
இலங்கையில்
காணாமற் போதல்கள் வழமையாக நடக்கின்றன. மனித உரிமை மீறல்களுக்குத் தண்டனை
வழங்கப்படுவதில்லை. மன்னிப்புச் சபையின் ஆசியா – பசுபிக் இயக்குநர் சாம்
சறிபி (Sam Zarifi) “இலங்கையின் கொடிய மனித உரிமை மீறல்கள் நியாயப்படுத்த முடியாதவை” என்றார்.
தடுப்புக்
காவலில் இருந்து புதிதாக விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது
செய்யப்படுகின்றனர். அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். படுகொலை செய்யப்
படுகின்றனர். காணாமற் போகச் செய்யப்படுகின்றனர் என்றும் மன்னிப்புச் சபை
குற்றம் சுமத்துகிறது.
போர்க்
குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் நிர்ப்பந்தம் இல்லாத காரணத்தால் அரசு
மனம் போன போக்கில் செயற்படுகிறது. அரசை விமர்சிப்போர் கைது செய்யப்படும்
ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் மன்னிப்புச் சபை கூறுகிறது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான எல்ரிரிஈ உறுப்பினர்களைப் போர்க் கைதிகள் (Prisoners of War) என்று வகைப்படுத்த மன்னிப்புச் சபை மறுக்கிறது. ஜெனிவா உடன்படிக்கையின் 4.1 சரத்து போர்க் கைதிகளைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
“பிணக்கின் ஒரு பகுதியினரான ஆயுதப் படைகளின் உறுப்பினர்களும் போரில் ஈடுபடும் ஆயுதம் தாங்கிய அமைப்புக்களும்(Militias) அப்படியான ஆயுதப் படைகளின் தன்னார்வ உறுப்பினர்களும்” போர்க் கைதிகளாவார்கள். (Geneva Convention Article 4.1.)
பிரபல
வழக்கறிஞர்கள், இராசதந்திரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்விமான்கள்
போன்றோரைத் தனது ஆதரவுப் பட்டியலில் கொண்டுள்ள அனைத்துலக மன்னிப்புச் சபை
காய்தல் உவத்தலின்றித் தனது பணியைத் தொடரும் என்று நம்புகிறோம்.
Source: http://www.tamilkathir.com/
No comments:
Post a Comment